Thursday 8 November 2012

Values and Stature is down,blood shed for mere statue on caste grounds

Dear Readers,

Caveat:This is a longish post in Tamil!

I am presenting you this thought provoking post as a guest post by my friend Arunchalam who shared his views and article to me.Perhaps,soon i will be posting in English also in my future blog on detailed caste analysis and its effects on present day society.

A nation where leaders manifesting as Vision 2020,Gharibhi hatto,Jai jawan jai kisan etc,but for centuries together we cannot resolve the deadly caste based discrimination and its evil effect to society.The below is the incident happened in south Tamil Nadu where still in this 21st century also one could surprisingly notice an uncivilized act of people on caste grounds.


சாதிச் சண்டையால் வெட்டப்பட்டு ரத்தக் கறையாகி நிற்கிறது
ராமநாதபுரம் மாவட்டம்.இந்த வருடம் மட்டுமல்ல, ஒவ்வொரு வருடமும் செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் தென்மாவட்டங்களுக்கும் போலீஸாருக்கும் டென்ஷன் மாவட்டங்களாகவே இருக்கின்றன.

காரணம் செப்டம்பரில் தேவேந்திர குல வேளாளர் இனத்தின் தலைவர் இமானுவேல் சேகரன்
நினைவு நாள். அக்டோபர் முத்துராமலிங்க தேவர் நினைவு பிறந்தநாள்!நமது இனம் எத்தகைய வரலாறுகளையும், கலாசார பின்னணிகளையும் கொண்டதாக இருந்தாலும்
நாம் அதை எப்படி நினைவு கூர்கிறோம் என்பதில்தான் அந்த வரலாற்றுப் பெருமை
வளர்கிறதா, தேய்கிறதா என்று தெரியும்.
அதன்படி பார்த்தால்...
இமானுவேல், முத்துராமலிங்கர் ஆகிய இருவரது வரலாறுகளையும் குலைக்கும்
வகையிலும், அவர்களை பெருமைப்படுத்துகிறோம் என்று சொல்லி அவர்களை பயத்தின்
அடையாளங்களாக மாற்றுவதிலுமே குறியாக இருக்கிறார்கள் அவரது வழி வருபவர்கள்.

இந்த அரசியல்வாதிகளும் பிணத்தை மொய்க்கும் ஈக்கள் போல... சாதி நினைவுகளை
மொய்த்துக் கொண்டு ஓட்டுவேட்டை ஆடி வருகிறார்கள்.கடந்தவருடம் செப்டம்பர் 11-ம் தேதி ஆறு அப்பாவி இளைஞர்கள் பரமக்குடியில் சிட்டுக்குருவிகள் போல போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.இதோ கடந்த அக்டோபர் 30ம் தேதி முத்துராமலிங்கர் ஜெயந்தியில் கொலை, விபத்து,திட்டமிட்ட வெடிகுண்டு வீச்சு என்று பத்துக்கும் மேற்பட்டவர்கள்
பலிவாங்கப்பட்டிருக்கிறார்கள்.ஏன் இந்த உயிர் பலிகள்? இமானுவேல் சேகரன் கேட்டாரா? முத்துராமலிங்கர் கேட்டாரா?

பரமக்குடியும், பசும்பொன்னும் பதற்றபுரிகளாக கிடக்கின்றன. ஒரு வாரம் பத்து
நாட்கள் கழித்து சரியாகிவிடும் என்று சிலர் சொன்னாலும்... அடுத்த வருடம் இந்த
நாட்கள் நெருங்கும்போது போனமுறை நடந்த கொலைக்கு யாரை பழிவாங்கவேண்டும் என்று
பட்டியல் தயாரிப்புப் பணிகள் ஆரம்பித்துவிடுகின்றன.ஆக... ஒவ்வொரு வருடமும் சங்கிலித் தொடராக இந்த சாதி கொலையோட்டத் தொடர் நடந்துவருகிறது.இமானுவேல் சேகரன் இந்திய இராணுவத்தில் இருந்து நாட்டுக்காக பாடுபட்டவர்.இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்டதோடு,. தேசியமும் தெய்வீகமும் என் இரண்டு கண்கள் என்றவர் முத்துராமலிங்க தேவர்.இந்த இருவரது வாழ்க்கையிலும் பின்பற்ற ஏராளமான நல்ல விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், இவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என்ற போர்வையில் இவர்களைப் பற்றிய நல்ல பிம்பங்களை எல்லாம் சுக்குநூறாக உடைத்து ஒரு பதற்ற பிம்பங்களையே உருவாக்க முயல்கிறார்கள் இருதரப்பினரும்.வருடாவருடம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம் என்ற பெயரில் மேலும் சிலருக்கும் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்வது ஏன்?

இமானுவேல் சேகரன் நினைவுநாள், தேவர் ஜெயந்தி ஆகிய இரண்டுமே அவர்களைப் பற்றிய
வரலாற்று நிகழ்வுகளை பரப்பி... அவர்கள் விரும்பிய அமைதியான தென்மாவட்டம்
கிடைக்கச் செய்கிறதா?இந்த இருபெரும் நிகழ்ச்சிகளுமே பதற்றக் குறியீடுகளாக மாறிப்போனதன் பெரும் பங்கு யாருக்கு...

இரண்டு சாதிகளின் பெயரையும் சொல்லி அரசியல் செய்யும் அரசியல் சாத்தான்களே
காரணம். ஓட்டு அரசியலுக்காக, எல்லா சாதி மக்களையும் கூர் தீட்டுவதே இந்த
அரசியல்வாதிகள் தான்.

அஞ்சலி செலுத்துவதற்கு எதற்கு ஐநூறு கார்கள், இருநூறு அரிவாள்கள்? இவர்கள் தன்
தலைவனுக்கு அஞ்சலி செலுத்தவா வருகிறார்கள்?

அல்ல... அந்த அரிவாள்கள் மூலம் கலவர நெருப்பைத் தூண்டிவிட்டு இன்னும் சில
நினைவு தினங்களை உருவாக்கிவிட்டு தங்கள் அரசியலின் வாழ்நாளை நீட்டித்துக்
கொள்கிறார்கள்.

இந்த அரசாங்கம் மக்கள் நலனில் குறிப்பாக தென் மாவட்டத்தில் நிறைந்து வாழும்
தேவேந்திர குல வேளார்கள், தேவர்கள் ஆகிய மக்களின் அமைதியான வாழ்க்கையில்
அக்கறை கொண்டிருந்தால், இந்த நிகழ்ச்சிகள் குறித்து தெளிவான நடைமுறைகளை
வகுத்துக் கொடுத்திருக்க வேண்டும்.

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அரசு சார்பில் நிகழ்ச்சி
எடுக்கப்படுகிறது. இதை தவிர்க்க முடியுமா தவிர்க்க முடியாதா என்பது வேறு
விஷயம்.முத்துராமலிங்கத் தேவருக்கு அரசு மரியாதை வேண்டாம் என்றால், அதைப் போல மற்ற தலைவர்களின் சிலைகளுக்கும் மரியாதை செலுத்துவது என்பது சிக்கலில் தான் போய்
முடியும்.ஆமாம். நம் தமிழ்நாட்டு மக்கள், மக்களாக இல்லாமல் கற்காலத்தை நோக்கிச்
செல்லும் மாக்களாக இருப்பது தான்.

நாட்டுக்காக, சுதந்திரத்துக்காக, பொது நோக்கத்துக்காக போராடிய தலைவர்களை
எல்லாம் சாதி முத்திரை குத்தி, அவர்களுக்கு விழா எடுப்பது ஒரு பேஷனாகிவிட்டது.

*முத்துராமலிங்கத் தேவர், கள்ளர், மறவர், அகமுடையர் சாதிக்காகவா சுதந்திரப்
போராட்டத்தில் குதித்தார்?**காமராஜர் நாடார் மக்களுக்கு மட்டுமா சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார்?*
*கட்டபொம்மன் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடியது நாயுடு சாதி மக்களுக்காகவா?*

*அழகு வீரமுத்துக்கோன் யாதவ மக்களின் உரிமைக்களுக்கு குரல் கொடுத்துவிட்டா
சாய்ந்தான்?*

*தீரன் சின்னமலை கொங்கு வேளாள கவுண்டர்களுக்கு மட்டும் உரிமைகளை பெறுவதற்கா
போராடினான்.*

*ராமசாமி படையாச்சி வன்னிய மக்களுக்கு மட்டுமா போராடினார்?*

*ரெட்டைமலை சீனிவாசன் ஆதி திராவிட இனத்துக்காக மட்டுமா போராடினார்?*

*வீரன் சுந்தரலிங்கம் தேவேந்திர குல மக்களுக்காகவா பாடுபட்டான்?*

*பெரும்பிடுகு முத்தரையர் தனது முத்தரையர் சாதிக்காக பாடுபட்டார்?*

ஆனால், இன்று இவர்கள் எல்லாரும் சாதி தலைவர்களாக பாவிக்கப்பட்டு, அவர்களது
சிலைக்கு மாலை போட்டு, ரகளை செய்துக் கொள்வதில் எத்தனை அலாதி தெரியுமா?

கரூரில் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை போடுவதில் கொங்கு இனத்தில்
ஈஸ்வரனுக்கும் தனியரசுக்கும் சண்டை... இப்படி ஒரு செய்தி படிக்க நேர்ந்ததே?
இதற்காகவா தீரன் சின்னமலை போராடினான்?

நெல்லையில் கட்டபொம்மன் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்துவிட்டு வரும் போது,
நாயுடு இன மக்களும் தலித் மக்களுக்கும் இடையே கலவரம், டி.எஸ்.பி.க்கு கத்திக்
குத்து என்று 2011ம் ஆண்டு செய்தி படிக்கும் போது, கட்டபொம்மன் என்ற குறுநில
மன்னன் மீது மக்களுக்கு என்ன மரியாதை ஏற்படும்?

இவர்களை விடுங்கள்!

*விடுதலை வீரன் வாஞ்சிநாதன் ஐயர் சாதித்தலைவனா?*

*வ.உ.சிதம்பரம் பிள்ளைமார் சங்கத் தலைவரா?*

*அட அவ்வளவு ஏன், பாரதியார் பிராமண சங்கத் தலைவராகவா இருந்தார்?*

*உலகப் பொதுமறை படைத்த திருவள்ளூவர் என்ன சாதி என்று இணையத்தில் இன்னும்
சண்டைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒருவன் அவர் கிராமணி என்கிறான்.
இன்னொருவன் அவர் மயிலாப்பூரைச் சேர்ந்த பிராமணன் என்கிறான். வேறு ஒருவன், அவர்
வள்ளூவர் இனத்தைச் சேர்ந்தவன் என்று எழுதிக் கொண்டிருக்கிறான்.*

*இதைவிட கொடுமை, ராஜ ராஜ சோழன் வன்னியரா தேவரா என்று இணையத்தில் அடித்துக்
கொண்டு சாகிறார்கள்?*

*இன்னும் கொஞ்ச நாட்களில் இவர்களையும் சாதி சங்கத் தலைவர்களாக்கிவிடுவார்கள்.
இதில் வ.உ.சி.யை பிள்ளைமார் சங்கத் தலைவராகவே ஆக்கியும் விட்டார்கள்
என்பதுதான் வேதனை.*

*இன்னும் கொஞ்ச நாளில் சிலப்பதிகார நூலை படைக்க காரணமாக இருந்த கண்ணகியும்
கோவலனும் செட்டியார் தலைவர்களாக மாற்றப்பட்டு, கண்ணகி கோயிலுக்கு இனி
செட்டியார் மட்டுமே சென்று வழி பட வேண்டும் என்ற நிலை வரலாம்!*
இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த காந்தியும் ஒரு வாணிபம் செய்யும்
குடும்பத்தில் பிறந்ததால், அவரையும் செட்டியார் இனத்துக்கு தலைவராக்கி
விடலாம்! பின்னர் சிலப்பதிகாரம் செட்டியார் அதிகாரம் என்று கூட அதிகாரபூர்வமாக
பெயர் மாற்றப்படலாம்!

அண்ணா, தி.மு.க.வை தோற்றுவித்தவர் என்பதை மாற்றி முதலியார் மக்களின் தலைவர்
என்று அழைக்கப்பட்டு, அண்ணா சிலைக்கு முதலியார் மக்களே மாலை அணிவிக்க வேண்டும்!

-இப்படியெல்லாம் ஒரு நாள் நடந்தே தீரும் என்று பயப்படத்தான் தோன்றுகிறது!

அம்பேத்கர் சிலையின் கையை உடைப்பதும், தலையை உடைப்பதும் நம் ஊரில் தலித்
மக்களை இழிவுபடுத்துவது என்று எழுதப்படாத சட்டமாகிப் போனது.

பாவம் அந்த சட்டமாமேதை அம்பேத்கர்!

சிலையின் கை, கால்களை உடைத்தால் அது மனிதர்களின் தலையை வெட்டுவதில்தானே
முடிகிறது.

இன்றைக்கும் நமக்கெல்லாம் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த தலைவர்கள் சாதி
முத்திரை முத்திரை குத்தப்பட்டதால் தாசில்தார் ஆபீஸ் மூலம் கம்பி வேலிக்குள்
அடைபட்டிருப்பதை பொது இடங்களில் கண்கூடாகவே பார்க்கிறோம்.

*அப்படியென்றால் இதற்கெல்லாம் தீர்வு தான் என்ன?*

*சிலைகளுக்கு மாலை அணிவிக்கிறோம் என்று அரசியல்வாதிகள் மாலை போட்டு, மக்களை
சாலை நெரிசலில் தவிக்கவிடுவதை முதலில் தடுக்க வேண்டும்.*

*அடுத்து, மாவட்டம் தோறும் இரண்டு ஏக்கர் அரசு நிலத்தில், ஊருக்கு வெளியே, ஊர்
எல்லையிலிருந்து 7 அல்லது எட்டு கிலோ மீட்டர் தொலைவில், தலைவர்கள் சிலை வளாகம்
கட்ட வேண்டும். அங்கே காந்தி, அம்பேத்கார், பெரியார், அண்ணா, முத்துராமலிங்கத்
தேவர், இமானுவேல் சேகரன், எம்.ஜி.ஆர்., உள்ளிட்ட எல்லா தலைவர்களின்
சிலைகளையும் வைக்க வேண்டும்.*

*ஆம்... சிலைகளுக்காவது ஒரு சமத்துவபுரம் அமைத்தோம் என்று நிம்மதிப்
பெருமூச்சு விட்டுக் கொள்ளலாம் அல்லவா!*

*அந்த வளாகம் 50 அடி உயர காம்பவுண்டு சுவர் கட்டப்பட்டு, மின்வேலி போடப்பட
வேண்டும். அங்கே நுழைவு வாயிலில் ஒரு போலீஸ் செக் போஸ்ட் போட்டு,
பாதுகாப்புக்கு நிரந்தரமாக ஏற்பாடு செய்ய வேண்டும்.*

தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளுக்கு ஊர்வலம் தடை செய்யப்பட
வேண்டும். அந்த வளாகத்திலேயே, சிறிய அளவில் ஊர்வலமாய் சென்று மாலை போட்டு,
பத்திரிகைகளுக்கு போட்டோவுக்காக போஸ் கொடுத்துக் கொள்ள வேண்டும்.

முதலில் ஊரில் இருக்கும் காந்தி உள்ளிட்ட அனைத்து தலைவர்களின் சிலைகளும்,
ஊருக்கு ஒதுக்குப்புறமாக கொண்டு போய் வளாகத்தில் அடைக்கப்பட வேண்டும்.

என்ன ஒதுக்குப்புறம் என்று சொல்கிறீர்களே என்று ஆத்திரப்பட்டால், வேறு என்ன
செய்ய? அவர்கள் சொல்லிக்கொடுத்த கருத்துக்களை நாம் தான் ஒதுக்கி
தள்ளிவிட்டோமே? அப்புறம் அவர்களை ஒதுக்குவதில் என்ன தவறு? பொது இடங்களில்
கூண்டுக்குள் நிற்பதை விட இது அவர்களுக்கு கேவலம் இல்லை!

-*இந்த உலகத்தில் பிறந்தவன் ஒவ்வொருவனும் அடுத்தவனை சார்ந்தே இருக்க வேண்டி
இருக்கிறது. தான் மட்டும் வாழ வேண்டும் என்று ஒவ்வொருவனும் நினைத்தால், இந்த
பூமியில் யாருமே வாழ முடியாது. அடுத்தவனையும் வாழ வைத்தால் தான், இந்த
பூமியில் நாமும் வாழ முடியும் என்பதை உணர மறுக்கும் கூட்டம் இருக்கும் வரை
இந்த நாட்டில் அமைதியோடு யாரும் வாழ முடியாது!*

வாழ்க தமிழ்!

No comments:

Post a Comment